இடைத்தரகர்களை நம்பி நடுரோட்டில் தவிப்பதாக கடலூர் மாவட்ட பன்னீர் கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பரிசு பச்சரிசி வெல்லம் திராட்சை முந்திரி பன்னீர் கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க அரசு 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதில் பன்னீர் கரும்புக்காக மட்டும் 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஏற்று இறக்கு கூலி போக்குவரத்து செலவு என முப்பத்தி மூன்று ரூபாய்க்கு பன்னீர் கரும்பு வாங்க அரசு அனுமதித்தது. ஆனால் அரசையும் பன்னீர் கரும்பு விவசாயிகளின் ஏமாற்றும் நோக்கில் இடைத்தரகர்கள் உள்ளே புகுந்து கரும்பு ஒன்று 10லிருந்து 13 ரூபாய்க்கு மட்டுமே விவசாயிகளை ஏமாற்றி கொள்முதல் செய்து அரசுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தனர்.
இது சம்பந்தமாக கடந்த வாரம் விவசாயிகளின் கண்ணீருடன் புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது. இதன் அடிப்படையில் தமிழக அரசு அரசின் பணம் விவசாயிகளுக்கு செல்லவேண்டிய நோக்கில் இடைத்தரகர் மூலம் கரும்புகள் வாங்கக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. இதனால் இடைத்தரகர்கள் விவசாயிகளை ஏமாற்றி 10 ரூபாய்க்கும் 13 ரூபாய்க்கு வாங்கிய கரும்புகளை லாரியில் ஏற்றி அனுப்பும்போது இந்த அறிவிப்பு வந்ததால் விவசாயிகளுக்கும் பணம் கொடுக்காமலும் லாரியில் ஏற்றப்பட்ட கரும்பை அனுப்பாமலும் லாரி வாடகை கொடுக்காமலும் அப்படியே விட்டு விட்டனர் இடைதரகர்கள்.
இதனால் சத்திரம் பகுதியில் தற்போது ஏற்றப்பட்ட கரும்பு லாரிகள் நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறது பல நாட்களாக லாரி ஓட்டுனர்கள் உணவின்றி ஏற்றப்பட்ட கரும்பை எங்கு கொண்டு செல்வது என்று தெரியாமலும் விவசாய நிலத்தில் கொட்டி விட்டுச் செல்வதா என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். கோயம்புத்தூர், தர்மபுரி, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து வந்த லாரிகள் தற்போது கரும்பு ஏற்றப்பட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
அதே சமயத்தில் பல விவசாய நிலத்தில் இடைத்தரகர்களால் வெட்டப்பட்ட பன்னீர் கரும்பு அப்படியே காய்ந்து கிடக்கிறது. அரசின் அறிவிப்பால் இடைத்தரகர்கள் விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமலும் லாரி வாடகை கொடுக்காமலும் தலைமறைவாகி விட்டதாக விவசாயிகளும் லாரி ஓட்டுனர்களும் கண்ணீர் வடிக்கின்றனர். அரசு நல்ல திட்டங்களை கொண்டுவரும் சமயங்களில் இதுபோல் இடைத்தரகர்கள் புகுந்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இதுபோல் செயல்படுவது ஒட்டுமொத்த விவசாயிகளையும் பாதிப்படையச் செய்துள்ளது. உடனடியாக அரசு எங்கள் நிலத்தில் வெட்டப்பட்ட கரும்புகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் 10 மாதமாக நாங்கள் பாதுகாத்து பயிர் செய்த பன்னீர் கரும்பு ஒட்டுமொத்தமாக காய்ந்து மண்ணோடு மண்ணாகி விடும் என கண்ணீர் வடித்து கூறுகிறார் அப்பியன்பேட்டை கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி.
’’தங்களிடம் இடைத்தரகர் வந்து கருப்பு வாங்குவதாக கூறி கரும்பை வெட்டினார்கள். நிலத்தில் இருந்த கரும்பு வெட்டிய பிறகு இடைத்தரகர்கள் கூடாது என்று அரசு கூறிய காரணத்தினால் அந்த கரும்பை அப்படியே விட்டுவிட்டு வாங்காமல் சென்று விட்டனர். விவசாய நிலத்தில் வெட்டப்படாமல் கரும்பு இருந்திருந்தால் கூட தனியார் வியாபாரியிடம் விற்றிருப்போம். ஆனால் அதற்கும் வழியில்லாமல் போனது வெட்டிய கரும்பை தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம்’’ என ரத்தக் கண்ணீர் வடிக்கிறார் அந்த விவசாயி.
இடைத்தரகர்களின் நியாயமற்ற அணுகுமுறையால் ஏமாந்து விட்டோம் எனவே அரசு தங்களுக்கு கை கொடுக்க வேண்டும் தமிழக முதல்வர் கருணையுடன் தங்களை திரும்பிப்பார்க்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கின்றனர் விவசாயிகள். ’’அதுமட்டுமில்லாமல் பன்னீர் கரும்புக்கு இதுவரைக்கும் எந்தவிதமான அங்கீகாரமும் இல்லை. இந்த பயிர் மட்டும் இதுவரையும் வேளாண் துறையிலும் அங்கீகரிக்கப்படவில்லை தோட்டக் கலைத் துறையிலும் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் இதற்கு காப்பீடு செய்ய முடியாது வங்கி கடன் வாங்க முடியாது. எங்கள் சொந்த முதலீட்டில் தாலியை அடகு வைத்து கடன் பெற்று இந்த விவசாயத்தை செய்து வருகிறோம். தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பன்னீர் கரும்பு இதுவரை அங்கீகாரம் இல்லாதது ஒட்டுமொத்த விவசாயத்தையும் கேள்விக்குறியாகிவிட்டது’’ என விவசாயிகள் மனமுருகி அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறார்கள்.
Source:PT