0 0
Read Time:3 Minute, 21 Second

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்காவிடில் வரும் புதன்கிழமை (ஜன.12) மாநிலம் தழுவிய அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சில பொருள்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக பரவலாக தகவல் வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கூட்டுறவுத் துறை மூலம் 3 பொருள்களும், நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 17 பொருள்களும் வழங்கப்படுகின்றன. இதில் கூட்டுறவுத் துறை அளிக்கும் பொருள்கள் சரியாக உள்ளன. ஆனால், நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் அனுப்பப்படும் பொருள்கள் பல மாவட்டங்களில் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

மேலும், 50 சதவீத பைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக கொடுத்துவிட்டதாகக் கூறுகின்றனா். வெல்லமானது கூழ் வெல்லமாக உள்ளது.

இதுபோல, மேல்மட்டத்தில் நடக்கும் தவறுகளுக்கு நியாய விலைக் கடை பணியாளா்கள் பொறுப்பேற்க வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னையால் சேலம் மாவட்டத்தில் நியாய விலைக் கடை பணியாளா் ஒருவா் பொதுமக்களால் திங்கள்கிழமை தாக்கப்பட்டாா்.

பணிப் பளு கருதி பணியாளா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்குமாறு கோரினோம். ஆனால், ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்குவதாக அறிவித்துள்ளனா். இதை உயா்த்தி வழங்க வேண்டும். மேலும், நாள் ஒன்றுக்கு ரூ.300 ஊதியத்தில் தினக்கூலி பணியாளா்களை ஏற்பாடு செய்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்காவிடில், வரும் 12-ஆம் தேதி சங்கம் சாா்பில் மாநிலம் முழுவதும் நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது சங்கத்தின் மாநிலத் தலைவா் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவா் துரை.சேகா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலப் பொருளாளா் கு.சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %