2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜனவரி தொடக்கம் முதல் கொரோனா 3ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 20,000 த்தை கடந்து பதிவாகி வருகிறது. இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 91 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். மருத்துவமனையில் 8 ஆயிரத்து 912 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், சென்னை மாநகராட்சி சார்பில் 5 கோவிட் சிகிச்சை கேர் மையங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் கூறினார்.
நந்தம்பாக்கத்தில் உள்ள கோவிட் சிகிச்சை மையம் முன்களப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் இறப்பின் நிலைக்கு செல்லவில்லை என தெரிவித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் , தமிழ்நாட்டில்தான் அதிக தொற்று பரிசோதனை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.