பொங்கல் விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்றது. அப்போது அங்குள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், பொங்கலுக்கு பின் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என எச்சரித்தார். கொரோனா சிகிச்சைக்காக 1 லட்சத்து 91 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன என்றும் தற்போது 9 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்றும் அவர் கூறினார். மருத்துவமனைகளில் ஆக்சிஜனும் மருந்துகளும் போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னை அடையாறு மண்டல அலுவலகத்தில் இயங்கி வரும் கொரோனா ஆலோசனை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்திருந்தார். அப்போது ஊரடங்கு குறித்து கேள்வி எழுந்ததில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.