மயிலாடுதுறை மாப்படுகை ரெயில்வே கேட் பகுதி சாந்துகாப்புத்தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சிவா(வயது 27). என்ஜினீயரான இவர், சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையை இழந்து சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு திரும்பி விட்டார்.
இந்த நிலையில் அவர் பொங்கல் பண்டிகை அன்று இரவு மாப்படுகை ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கால் வைத்தபடி மயங்கி கிடந்துள்ளார். அந்த நேரத்தில் மயிலாடுதுறையை நோக்கி வந்த ரெயில் ஒன்றின் சக்கரத்தில் சிக்கி சிவாவின் கால்கள் சிதைந்தன.
சிகிச்சை பலனின்றி சாவு
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று சிவாவை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மறுநாள் சிகிச்சை பலனின்றி சிவா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவா, எதன் காரணமாக ரெயில் தண்டவாளத்தில் மயங்கி கிடந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.