கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 10 டாக்டர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 150 பேரில் 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள ஆஸ்பத்திரி நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார்கள்.
பள்ளி, விடுதி மூடல்
செவிலியர் பயிற்சி பள்ளி, அதனுடன் சேர்ந்த விடுதி ஆகியவற்றை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றி, அதை தற்காலிகமாக மூடி ஆஸ்பத்திரி நிர்வாகம் கண்காணித்து வருகிறது.
ஆனால் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவி களுக்கு போதுமான முக கவசம், கையுறை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இவர்கள் கொரோனா வார்டு முதல் அனைத்து வார்டுகளிலும் பணியாற்றி வருகின்றனர். ஆனால் போதுமான உபகரணங்கள் வழங்கப்படாததால் இந்த நோய் தொற்று பரவி உள்ளதாக தெரிகிறது.
அபராதம்
ஆகவே ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு தரமான முக கவசம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் முக கவசம் அணிவதில்லை. அவர்களை கண்காணிக்க நுழைவு வாசலில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபட வைத்து அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கண்காணிப்பாளர் சாய்லீலா தெரிவித்தார்.