சாலைகளில் தேங்கி கிடக்கும் பாதாள சாக்கடை கழவுநீரை அகற்றக்கோரி மயிலாடுதுறையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பதை கண்டித்து மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் உள்ள ராஜன்தோட்டம் விளையாட்டு மைதானம் எதிரே பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் தங்க.அய்யாசாமி, மாநில வன்னியர் சங்க துணை தலைவர் பாக்கம் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கமல்ராஜா வரவேற்றார்.
இதில் மாநில அமைப்பு துணை செயலாளர் காசி.பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன், மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகவேல், உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாதாள சாக்கடை கழிவுநீர்:
மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி ஆங்காங்கே சாலைகளில் தேங்கி நிற்பதை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும். குறிப்பாக தருமபுரம் சாலை, பூம்புகார் சாலையில் தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்பதை அப்புறப்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் நகர துணை செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.