டெல்லியில் நடைபெறும் குடியரசு மற்றும் சுதந்திர தின அணிவகுப்பு பேரணிகளில் எதிர்காலத்தில் அனைத்து மாநிலங்களின் சிறப்பான அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது உறுதி செய்யப்படும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டிற்காக ரத்தம் சிந்தி தியாகம் செய்தவர்களின் வரலாற்று செய்திகளை யாராலும் எப்பொழுதும் எங்கும் எக்காரணம் கொண்டும் மறைக்கப்படுவது அல்லது மாற்றப்படுவதை அனுமதிக்கக்கூடாது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குஜராத் முதல் ஒரிசா வரை அகன்று விரிந்த நமது தேசத்தின் விடுதலைக்கும், வளர்ச்சிக்கும் வித்திட்டவர்களை எப்பொழுதெல்லாம் ஞாபகப்படுத்திப் பெருமைப்படுத்த முடியுமோ அப்பொழுதெல்லாம் பெருமைப்படுத்த தவறக்கூடாது. இவ்விஷயத்தில் அரசியல் பார்த்தால் அது நிச்சயமாக தேசவிரோத செயலாகவே அமையும். எதிர்காலத்தில் இது போன்ற பாரபட்சம் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிலும் சுதந்திர தின விழாவிலும் டெல்லியில் நடைபெறும் பேரணிகளில் அவசியம் அனைத்து மாநிலத்திற்கும் அங்கீகாரம் வழங்கும் வண்ணம் அவர்களின் சிறப்புமிக்க வரலாற்றை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் எந்தவித நிபந்தனைக்கும் இடம் கொடுக்காது, தட்டிக் கழிக்காமல் இடம்பெற செய்வதால் மட்டுமே சிறப்பு ஏற்படும்.
இவ்வாண்டு தமிழகத்தைச் சார்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் வ.உ. சிதம்பரம் பிள்ளை, வேலு நாச்சியார் இடம்பெற்ற ஊர்தி தடைசெய்ததால் ஏற்பட்ட சர்ச்சை போன்று ஏற்படாமல் இருக்கும். இல்லையேல் ஒன்றுபட்ட நமது இந்திய தேசத்தில் வீணான கசப்புக்கள் ஏற்பட வழி வாய்ப்புகள் உள்ளது. அதேபோல மாநில அளவில் நடத்தப்படுகின்ற இதுபோன்ற பேரணிகளில் மாநிலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். ஆட்சிகள் மாறினாலும் மாறாதது நமது வரலாறு. வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தாரக மந்திரத்தைக் காக்க வேண்டியது ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது இந்தியர்கள் அனைவரின் கடமையாகும். என தெரிவித்துள்ளார்.
செய்தி: அப்பர்