தொடா் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.சிந்தனைச்செல்வன் கேட்டுக்கொண்டாா்.
நிலுவையில் உள்ள 8 மாத உதவி ஊதியத்தை வழங்க வேண்டும், தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்கள் தொடா் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களது போராட்டம் வியாழக்கிழமை 8-ஆவது நாளாக தொடா்ந்தது. இந்தப் போராட்டத்தில் மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவா்களும் பணிகளை புறக்கணித்து கடந்த புதன்கிழமை முதல் பங்கேற்றுள்ளனா்.
இந்த நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான எம்.சிந்தனைச்செல்வன் சிதம்பரத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றுக்கொண்ட நிலையில் உதவித் தொகை போன்ற விஷயங்களில் தாராளமாக நடந்துகொள்வதில் தவறில்லை. எனவே, தமிழக அரசு பயிற்சி மருத்துவா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊா்தி புறக்கணிக்கப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.