மதுரை மாவட்டத்தில் 320 கோடியே 58 இலட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை மாவட்டத்தில், 51 கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பில் மருத்துவக்கல்லூரியில் கல்வியில் கூடம், ஊரகவளர்ச்சித்துறை புதிய அலுவலகம் உள்ளிட்ட 10 முடிவுற்ற திட்டங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து 49 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான பொது நல ஆய்வகம், தோப்பூரில் தொற்று நோய் சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட 11 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 19 துறைகளின் கீழ் 67ஆயிரத்து 831 பயனாளிகளுக்கு 219 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பழமை வாய்ந்த சங்க கால நகரமாக இருந்த மதுரையை நவீன நகரமாக மாற்றியது திமுக அரசு என்று கூறினார்.
நகராட்சியாக இருந்த மதுரையை மாநகராட்சியாக உயர்த்தியது, சென்னை உயர்நீதிமன்ற கிளையை மதுரையில் நிறுவியது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் திமுக ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டது என்பதையும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இத்தகைய வளர்ச்சி பெற்ற மதுரையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் விரைவில் அமைய உள்ளதையம் சுட்டிக்காட்டினார்.
மதுரையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் போக்குவரத்து மேம்பாலங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனக்கூறினார். மேலும் 500 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நேரிட்ட வளாகம் 18 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.
மதுரையில் புதிதாக சிப்காட் தொழிற்சாலை, மதுரை மத்திய சிறைச்சாலை புறநகருக்கு மாற்றம், அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிகட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில் பட்டியலிட்டார்.