மயிலாடுதுறை: மாயமான மனைவியை கண்டுபிடித்து தராத போலீசாரை கண்டித்து மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றார்.
பா.ஜ.க. பிரமுகர்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முல்லைநாதன்(வயது 51). பா.ஜ.க. வக்கீல் அணி மாவட்ட செயலாளராக உள்ளார்.
இவர் சீர்காழியை சேர்ந்த ஜெயஸ்ரீ(50) என்பவரை காதலித்து கடந்த 1996-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் முல்லைநாதன் தேர்தல் பணி தொடர்பாக கோவைக்கு சென்றார்.
மனைவி மாயம்:
ஏப்ரல் 1-ந் தேதி முல்லைநாதன் தனது மனைவி ஜெயஸ்ரீயை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகி இருந்தது. இதனையடுத்து முல்லைநாதன் கோவையில் இருந்து உடனடியாக புறப்பட்டு வீட்டிற்கு வந்தார்.
வீட்டில் பார்த்தபோது ஜெயஸ்ரீயை காணவில்லை. வீட்டில் மனைவியை காணாததால் முல்லைநாதன் கடும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த நகை-பணம் ஆகியவையும் மாயமாகி இருந்தது.
இதனையடுத்து தனது மனைவியை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வீடுகளிலும், பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் மனைவி கிடைக்காததால் தனது மனைவி மாயமானது குறித்து முல்லைநாதன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் முல்லைநாதன், கோர்ட்டில் 2 முறை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துடன், கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் தொடர்ந்துள்ளார். அதன் பேரிலும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
தீக்குளிக்க முயற்சி:
இதனால் மனமுடைந்த முல்லைநாதன் நேற்று மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அதைப்பார்த்து ஓடோடி வந்து தீக்குளிக்க முயன்ற முல்லைநாதனை தடுத்ததோடு, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் போலீசார் முல்லைநாதனை மயிலாடுதுறை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.