மயிலாடுதுறையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ரகசிய தகவல்:
மயிலாடுதுறை ரெயிலடி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மயிலாடுதுறை ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகில் வேதம்பிள்ளைத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனிப்படை போலீசார் அதிரடியாக புகுந்து சோதனையிட்டனர்.
ரூ.1½ லட்சம் கஞ்சா பறிமுதல்:
சோதனையில் அந்த வீட்டில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மயிலாடுதுறை பெரியசாலியத்தெரு அய்யர் மகன் ரஞ்சித் (வயது26) என்பவர் வேதம்பிள்ளை தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
2 பேர் கைது:
மேலும் மயிலாடுதுறை புனுகீஸ்வரன்கோவில் வடக்குவீதியைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் மகேஷ் (21) என்பவரும் ரஞ்சித்துடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் மற்றும் மகேசை கைது செய்தனர்.