விழுப்புரம் : கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம் தொட்ட நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். அதேசமயம் இறுதியாண்டு மாணவர்கள் இறுதி பருவ தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் கொரோனா பாதுகாப்பு மையங்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 1-ம் தேதி முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா ? நடைபெறாதா? என்று மாணவர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , ‘கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டாலும், அறிவிக்கப்பட்டது போன்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும். மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம். கல்லூரி மாணவர்களுக்கு 1,3,5வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும். செய்முறை தேர்வுகளுக்காகவே மாணவர்கள் நலன் கருதி பிப்.1ல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஆன்லைன் தேர்வு இல்லாத நாட்களில் செய்முறை தேர்வுக்காக மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும்.தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் உள்ளது,’ என்றார்.