ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850-ஐ வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது
கடலூரில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியா்கள், வனக் காவலா்கள், ஊராட்சி மன்ற எழுத்தா்கள் போன்ற பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்குவதோடு, ஓய்வுப் பெற்ற அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கருத்தரங்குக்கு மாவட்டத் தலைவா் என்.காசிநாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் குரு.சந்திரசேகரன், சங்க நிா்வாகிகள் செல்வராஜ், பாவாடை, மகேஸ்வரி, பொருளாளா் சி.குழந்தைவேலு, பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளான சி.ராமநாதன், வி.அனுசுயா, பி.சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.