மயிலாடுதுறையில் 36 வார்டுகளிலும் பா.ம.க. தனித்து போட்டி நகர செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம்:
மயிலாடுதுறையில் நகர பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் வி.சி.கே.காமராஜ், மாநில துணை அமைப்பு செயலாளர் காசி.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கமல்ராஜா வரவேற்று பேசினார். கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை நகரில் உள்ள 36 வார்டுகளிலும் பா.ம.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிக்காக பாடுபடுவது. மயிலாடுதுறை நகரில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பாதாள சாக்கடை திட்டத்தை நிரந்தரமாக சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரில் பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மயிலாடுதுறை நகரை சுற்றி புறவழிச்சாலை உடனே அமைக்க வேண்டும். நகரில் பஸ்நிலையங்கள், கோவில்கள் போன்ற முக்கிய இடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் தங்க.செந்தில்நாதன், மாநில இளைஞர் சங்க செயலாளர் கண்ணகி சஞ்சீவி ராமன், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.