சுருண்டு விழுந்து செத்தன:
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள திருவாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமாத்மா (வயது 35). இவர் 30 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பரமாத்மா மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த ஆடுகளை ஓட்டி வந்து, வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். நள்ளிரவில் ஆடுகள் கத்தியபடி அடுத்தடுத்து சுருண்டு விழுந்து பரிதாபமாக செத்தன. ஆடுகள் அலறிய சத்தத்தை கேட்டு எழுந்த பரமாத்மா பட்டிக்கு ஓடி வந்து பார்த்தபோது, 30 ஆடுகளும் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பரமாத்மா இதுபற்றி கால்நடைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதிகாரிகள் விசாரணை
அதன்பேரில் வீரப்பெருமாநல்லூர் கால்நடை டாக்டர் வசந்தராணி, கடலூர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர்கள் கஸ்தூரி, மகேஸ்வரி மற்றும் கால்நடை டாக்டர் சுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்மமான முறையில் செத்த ஆடுகளை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் செத்துக்கிடந்த ஆடுகளின் உடற்பகுதிகளை ஆய்வுக்காக சேகரித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் மர்மமான முறையில் செத்துள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை. உடற்கூராய்வு பரிசோதனை முடிவு வந்தால் தான் ஆடுகள் செத்ததற்கான காரணம் குறித்து தெரிய வரும் என்றார். பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 30 ஆடுகள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து செத்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.