சீர்காழி அருகே நிலம் வழங்கியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி நான்கு வழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நான்கு வழிச்சாலை பணிகள்
சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில், காத்திருப்பு, செம்பதனிருப்பு, நடராஜ பிள்ளை சாவடி உள்ளிட்ட கிராமங்களில் விழுப்புரம்-நாகை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலை அமைப்பதற்காக மேற்கண்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான நபர்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதற்கு உரிய இழப்பீடு வழங்காத காரணத்தால் நில உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனிடையே நிலம் கையகப்படுத்தப்பட்ட உரிமையாளர்களுக்கு மேல்முறையீட்டு பணம் வழங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. அதன்படி நில உரிமையாளர்கள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் தங்களுக்கு கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என மனு அளித்து மேல்முறையீடு செய்தனர்.
வாகனங்கள் சிறைப்பிடிப்பு
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், செம்பதனிருப்பு கிராமத்தில் நில உரிமையாளர்கள் தங்களுடைய மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்து கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நான்கு வழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி, பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சீர்காழி வட்டார த.மா.கா. தலைவர் பண்டரிநாதன், பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கேசவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை
இதை அறிந்த சீர்காழி தாசில்தார் சண்முகம், செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கையை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.