தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் போட்டியிட திமுக, அதிமுக, விசிக, அமமுக, மக்கள் நீதி மையம் என பல்வேறு கட்சிகளும் கடந்த 28 ஆம் தேதி முதல் கடைசி நாளன நேற்றுவரை பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர். தற்பொழுது கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளில் 286 பேர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் தற்போது கடலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட், மற்றும் இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் கடலூர் மாநகராட்சி 10வது வார்டு பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் 55 வயதான ராஜமோகன் என்பவர் M.A(Eng)., M.Phil., M.L.I.S., M.B.A.,B.Ed., M.Sc.,(APP.PSY)., PGDCA போன்ற பட்டப் படிப்புகளை படித்து உள்ளார். தொடர்ந்து படித்துக் கொண்டிருந்த அவர் தற்பொழுது கடலூர் மாநகராட்சித் தேர்தலில் களம் காண உள்ளார். இதுகுறித்து ராஜமோகன் கூறுகையில்,சிறு வயதில் இருந்தே படிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது இதன் காரணமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து பலவிதமான பட்டப்படிப்புகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது இதனால் தொடர்ந்து பல பட்டப் படிப்புகளை படித்து முடித்துள்ளேன்
இவ்வளவு படித்த நபர் அரசியலுக்கு வர காரணம் குறித்து கேட்ட பொழுது, பொதுவாக படித்தவர்கள் யாரும் அரசியலுக்கு வருவது மிகவும் அரிதாக காணப்படுகிறது ஆனால், என் பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் மேலும், தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் பள்ளிக்கூடம் சென்றது அரிதாகிவிட்டது ஆதலால் கல்வியின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி, அனைவருக்கும் கல்வி எனும் ஆயுதத்தை முறையாக பயன்படுத்தினால் எதையும் வென்று காட்டலாம், அதுமட்டுமின்றி கல்விதான் நம் வாழ்வில் எப்போதும் உடன் வரும் செல்வம் எனது கல்வியால் நான் பெற்ற அறிவினை என் மக்களின் நலனுக்காக நிச்சயமாக பயன்படுத்துவேன் என கூறினார்.