இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.
கள்ள உறவுக்கு ஆதரவாக செயல்பட்ட பாதிரியார் வாலன்டைன் இறந்த நாளான பிப்ரவரி-14 ஆம் தேதி ஜரோப்பிய கிறிஸ்தவர்களில் ஒரு சிறு பிரிவினரால் காதலர் தினமாக கொண்டாடப்பட்டது. பண்பாட்டிலும் கலாச்சாத்திலும், கற்பு நெறியிலும் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் கற்புக்கரசி கண்ணகி பிறந்த தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக இந்த மோசமான நிகழ்வு அரங்கேற்றப்பட்டு வருகிறது.
இது நமது தேசத்தின் அடிப்படையையே கொச்சைப்படுத்துவதாகும். இந்து மதமும்,
இந்து மக்கள் கட்சியும் காதலுக்கும், காதலர்களுக்கும் என்றைக்கும் எதிரானது அல்ல.
இந்து கலாச்சாரத்தில் காதலின் சிறப்பும், மேன்மையும் பல இடங்களில் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. உலக பொதுமறையான திருக்குறளை உலகிற்கு தந்த வள்ளுவப் பெருந்தகை இன்பத்துப்பால் என்ற அதிகாரத்தின் கீழ் உண்மைக் காதலின் மகத்துவத்தையும் இல்லறத்தின் தூய்மையையும் விளக்கியுள்ளார்.நமது புராணங்கள், இதிகாசங்களில் காதலின் புனிதம் போற்றப்பட்டுள்ளது.
தமிழர்களின் இல்லற வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கும் அகநானூறு போன்ற பல காப்பியங்கள் நம்மிடையே உள்ளன. இவற்றிலெல்லாம் விரசமோ, வக்கிரமோ, பண்பாட்டிற்கு எதிரான துவேஷமோ, அருவருக்கும் ஆபாசமோ, குடும்ப அமைப்பு முறையை சிதைக்கும் சிந்தனைகளோ சொல்லப்படவில்லை . மாறாக நமது முன்னோர்கள் அன்பின் அடையாளமாகத் தான் காதலை காப்பியமாக படைத்திருக்கிறார்கள். நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதிக்காத கொண்டாட்டங்களையோ, பழக்க வழக்கங்களையோ நாம் ஏற்றுக்கொள்ள ஒரு போதும் தயங்கியதில்லை.
தேசத்தின் ஆன்மாவான ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த நிலை, தாய்-தந்தைஉறவுகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை, கற்பு நெறி போன்றவற்றை திட்டமிட்டு சீர்குலைக்கும் நோக்கத்தோடு பன்னாட்டு வியாபார நிறுவனங்களும், கிறிஸ்தவ மிஷினரிகளும், பணத்தை மட்டுமே லட்சியமாக கொண்டு செயல்படும் சில மீடியாக்களும் கைகோர்த்துக் கொண்டு நடத்துகிற தேச விரோத, பண்பாட்டு சீரழிவுக்கான நிகழ்வாக காதலர் தினம் உள்ளது. பிப்ரவரி 14ம் தேதி தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள், கோயில்கள், பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களில் ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் அரங்கேற்றப்படும் காமக் களியாட்டங்களை தடுக்க
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரமும், காதலும் தமிழர்களின் இரு கண்கள் என்ற உயர்ந்த நோக்கத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக நடைபெறும் ஆபாச காதலர் தின கொண்டாட்டங்களை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய இந்து மக்கள் கட்சி வலியுறுத்துகிறது என அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.