நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்கான நேரத்தை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் வேட்பாளர் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவித்த போது பிரச்சாரத்திற்கான நேரத்தையும், கொரோனா கால விதிகளையும் பின்பற்றியும் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பிரச்சாரத்திற்கான நேரத்தை நீட்டித்து இன்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேட்பாளர்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்கு சேகரிக்கலாம் என்றும் ஊர்வலம், பாத யாத்திரை, சைக்கிள் பேரணி ஆகியவற்றுக்கான தடையயும், நீக்குவதாக அறிவித்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பரப்புரை மேற்கொள்ளவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.