பார்வைத்திறனை அச்சுறுத்தும் பிரச்சினைகளோடு, கண்ணுக்குள் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான நோயான தைராய்டு கண்நோய் பாதிப்பு, கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பிறகு அதிகரித்திருப்பதாக டாக்டர் அகர்வால்ஸ் கண் ஆஸ்பத்திரி தெரிவித்துள்ளது. அதிலும் சென்னை மாநகரில் ஏறக்குறைய 25 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளதாக டாக்டர் அகர்வால்ஸ் கண் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனரும், மருத்துவ சேவைகள் துறையின் தலைவருமான டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறுகிறார்.
மேலும் அவர், தாமதிக்கப்பட்ட நோயறிதல் சோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் காரணமாகவும், நோய்த்தொற்று காலத்தின்போது அதிகரித்த மனஅழுத்த அளவுகளினாலும் தைராய்டு கண்நோய் பாதிப்பு அச்சுறுத்தும் அளவுக்கு கடுமையாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கிறார். காலை வேளையிலும், சூரியஒளியிலும் கண்இமைகள் வீங்குவதும், கண் சிவந்துபோவது, அசவுகரியம் மற்றும் கண்ணில் இருந்து நீர்வடிதல் ஆகியவை தைராய்டு கண்நோய் பாதிப்பு அறிகுறிகளாக இருப்பதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து கண் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மற்றும் அழகியல் சேவைகள் துறையின் தலைவர் டாக்டர் பிரித்தி உதய் கூறுகையில், ‘வைரசுக்கான எதிர்ப்பு மருந்துகள் தைராய்டு சுரப்பியை பாதிப்பதற்கான சாத்தியமும் இருக்கிறது. கொரோனா தொற்று காலத்தில் ஆஸ்பத்திரிகளையும், பரிசோதனையகங்களையும் அணுக முடியாததாலும், அதை நோயாளிகள் தவிர்த்ததாலும் தைராய்டு அளவுகள் உயர்ந்ததற்கு காரணமாக இருக்கலாம்’ என்றார்.