பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ்(83) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராகுல் பஜாஜ் இன்று பிற்பகல் காலமானார்.
ஜூன் 10, 1938- ஆண்டு பிறந்த ராகுல் பஜாஜ், பொருளாதாரம் மற்றும் சட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இத்துடன் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்று இருக்கிறார். இவர் 1968 ஆம் ஆண்டு நிர்வாக அலுவலராக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
1968 -ஆண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார். இவர் இந்த பதவியேற்கும் போது இத்தகைய பதவியை ஏற்ற இளம் இந்தியர் என்ற பெருமையை ராகுல் பஜாஜ் பெற்றார். அதன்பின் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அசுர வளர்ச்சியை பெற்றதோடு தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்டது.
பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளை ராகுல் பஜாஜ் பெற்றுள்ளார். ராஜ்யசபா எம்.பி., ஆகவும் பதவி வகித்துள்ளார். பஜாஜ் ஆட்டோ தலைவர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் ராகுல் பஜாஜ் ராஜினாமா செய்தார்.