மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவில் காசிக்கு இணையான 5 கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. நவக்கிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
சிவனின் மூன்று கண்களில் இருந்து மூன்று பொருட்கள் தோன்றி விழுந்து சந்திரன், சூரியன் மற்றும் அக்னி பெயரால் இந்த கோவிலில் மூன்று குளங்கள் விளங்குகின்றன. சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகம் அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
சிதம்பரத்திற்கு முற்பட்ட கோவிலாக விளங்குவதால் இதனை ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கின்றனர். இங்கு நடராஜர் சபையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பித்ரு லோக தலைவனான ருத்ரனின் பாதம் சந்திர தீர்த்தக் கரையில் அமைந்துள்ளது.
இதில் தர்ப்பணம் செய்து வழிபட்டால் 27 தலைமுறைகள் செய்த பாவம் விலகுவதாக ஐதீகம். இதற்கெல்லாம் மேலாக ராமாயணத்தில் இந்த கோவிலைப்பற்றி குறிப்புகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோவிலில் வருடாந்திர இந்திரப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்க்கும், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் ஆலய அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் கொடி ஏற்றி வைத்தார்.
இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், சீர்காழி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிருபர்:முரளிதரன்,சீர்காழி.