தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 12 ஆயிரத்து 607 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 57 ஆயிரத்து 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மாநகராட்சி பகுதிகளில் 15 ஆயிரத்து 158, நகராட்சியில் 7,417, பேரூராட்சிகளி்ல் 8,454 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. முன்னாள் ராணுவத்தினர் மற்றும், காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து உத்தேச வாக்குப்பதிவு எண்ணிக்கை விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
அதன்படி, மாநகராட்சிகளில் 52.22 சதவீத வாக்குகளும், நகராட்சிகளில் 68.22 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 74.88 சதவீத வாக்குகளும் உத்தேசமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 80.49 சதவீதமும், மாநகராட்சியை பொறுத்தவரையில், அதிகபட்சமாக கரூரில் 75.84 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக சென்னை மாநகராட்சியில் 43.59 சதவீதம் பதிவாகியுள்ளது.
நகராட்சிகளை பொறுத்தவரையில், அதிகபட்சமாக தருமபுரியில் 81.37 சதவீதமும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 59.98 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. பேரூராட்சிகளில் அதிகபட்சமாக ராணிப்பேட்டையில் 83.13 சதவீதமும், குறைந்த பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 66.29 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கிறது.