0 0
Read Time:3 Minute, 11 Second

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளி திமுக வெற்றிக் கனியை பறித்துள்ளது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர் மாநகராட்சிகளில் அமோக வெற்றி பெற்ற திமுக மேயர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. வால்பாறை நகராட்சி, காங்கயம் நகராட்சி, பல்லடம் நகராட்சி, மேட்டுப்பாளையம் நகராட்சி, நரசிங்கபுரம் நகராட்சி, தர்மபுரி நகராட்சி என அதிமுக கோலோச்சிய பகுதிகளில் திமுக வெற்றி கொடி நாட்டியுள்ளது. தொண்டாமுத்தூர், ஆலந்துறை, ஆனைமலை, பேரூர், சூலூர் உள்ளிட்ட 20 பேரூராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடி நகராட்சியையே திமுக தன் வசமாக்கி உள்ளது.

பெரும்பாலான தேர்தல்களில் அதிமுகவுக்கே சாதகமாக இருந்த கொங்கு மண்டலம் தற்போது திமுக வசமாகி உள்ளது. கொங்கு மண்டலத்தை குறிவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டங்களே அக்கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வது குறித்த மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரப்புரை ஆகியவையே அக்கட்சிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளதாகக் திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

2011 மற்றும் 2016 தேர்தல்களில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வின் ஆட்சி அமைவதற்கு கொங்கு மண்டலங்களில் பெற்ற வாக்குகளே முக்கியப் பங்கு வகித்தன. 2021ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. தமிழகத்தின் பிற பகுதிகளில் குறைவான இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் கோவையிலோ 10 தொகுதிகளையும் கைப்பற்றியது.

சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிக இடங்களை பிடித்து எதிர்கட்சி அந்தஸ்தில் அமர்ந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட கொங்கு மண்டல மக்கள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை வாரிக் கொடுத்திருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %