இந்திய ராணுவத்தின் தென்பிராந்திய சாகச சங்கம் மற்றும் இ.எம்.இ. படகோட்டும் சங்கம் ஆகியவை இணைந்து முதல் முறையாக 10 பெண் ராணுவ அதிகாரிகள் குழு சென்னையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு பாய்மர கப்பலில் செல்லும் கடல் சாகச பயணத்தை சென்னை துறைமுகத்தில், தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 15-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த சாகச குழுவில் மேஜர் முக்தாஸ் கவுதம், மேஜர்கள் பிரியா செம்வால், பிரியா தாஸ், ரஷ்மில் சங்வான், அர்பிதா த்விவேதி, சஞ்சனா மிட்டல் மற்றும் கேப்டன்கள் ஜோதி சிங், மாளவிகா ராவத், சுபம் சோலங்கி, சோனல் கோயல் ஆகிய 10 பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னையில் இருந்து புறப்பட்ட இக்குழுவினர் விசாகப்பட்டினத்துக்கு சென்றனர். அங்கிருந்து கடந்த 18-ந்தேதி மீண்டும் சென்னைக்கு புறப்பட்டனர். தனது சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு இக்குழு நேற்று சென்னை திரும்பியது.
இக்குழுவுக்கு சென்னை துறைமுகத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சென்னை துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் பாலாஜி அருண் குமார், இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோர காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.