தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர்களுக்கான தேர்தல் 4-ந்தேதி நடைபெறுகிறது. தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர்கள் 51 பேருக்கும் இது தொடர்பான கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 22-ந்தேதி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள் மற்றும் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 459 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்தலும், மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி துணைத்தலைவர்கள் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டு கவுன்சிலர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 2-ந்தேதி பதவி ஏற்க உள்ளனர். இந்த நிலையில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறுவது தொடர்பாக 51 வார்டு கவுன்சிலர்களுக்கும் முறைப்படி மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதையொட்டி தஞ்சை மாநகராட்சி கூட்ட அரங்கமும் தயார் நிலையில் உள்ளது. மேலும் மேயருக்கான நாற்காலியும் புதிதாக தயார் செய்யப்பட்டு உள்ளது. மேயருக்கான காரும், கொடி, பெயர் பலகை பொறித்தவாறு தஞ்சை மாநகராட்சி வளாகத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளதால் மேயர், துணை மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மூலம் சிலர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக அவர்கள் சென்னையிலும் முகாமிட்டுள்ளனர்.