- முதலமைச்சர் ஸ்டாலின் ”உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பல அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் செல்வர். தாங்கள் எதிர்பார்க்கும் புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் சென்னை புத்தக கண்காட்சிக்குக் மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக இருந்ததும் இந்த புத்தகங்கள் தான் என்றால் அது மிகையாகாது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசி சார்பில் இந்த வருடத்திற்கான புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், உங்களில் ஒருவன் எனும் புத்தகத்தை நான் எழுதியுள்ளேன் எனவும், சுயசரிதையான அந்த புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் கூறினார். என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த மிக முக்கிய நிகழ்வுகள் தொடங்கிய போராட்டம் வரை புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்” எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். விரைவில் 45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரை பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி, “உங்களில் ஒருவன்” நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழாவிற்கு சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருப்பதாகவும், இவை தவிர, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், தேசிய அளவில் அடுத்து செய்ய வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் பல விஷயங்கள் பற்றி இந்த விழாவின் போது ஆலோசனை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க வேண்டுமென பூச்சி முருகன் அவருக்கு நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்தார். மேற்கொண்டு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.