தஞ்சை, நாகையில் 750 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி. கயல்விழி பாராட்டினார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கஞ்சா கடத்தலை தடுக்கவும், கஞ்சா கடத்துபவர்களை கைது செய்யவும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அந்தந்த போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 14 பேரையும் கைது செய்தனர்.
அதேபோல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான நாகை மாவட்ட தனிப்படை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிமாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கஞ்சாவையும், 3 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை பறிமுதல் செய்த தஞ்சை மற்றும் நாகை மாவட்ட தனிப்படை போலீசாரை ஏற்கனவே டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்து இருந்தார்.
இந்த நிலையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தனது அலுவலகத்திற்கு 2 தனிப்படை போலீசாரையும் வரவழைத்து அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கியதுடன், வெகுமதியும் வழங்கினார்.