ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 12ஆம் தேதி இரணைத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி லெனின்குமார், ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அடுத்து யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 12 மீனவர்களும் இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்னும் ஓரிரு நாட்களில் மீனவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் மேலும் 47 மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர்.