கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது தொடா்பாக 150 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
கடலூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெறும் கஞ்சா, லாட்டரி, குட்கா விற்பனை, மதுபானம் கடத்தல், சூதாட்டம் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உத்தரவிட்டாா். அதன்படி, மாவட்டம் முழுவதும் கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் (பிப். 26, 27) சோதனை நடத்தப்பட்டது.
இதில், கஞ்சா விற்பனை, கஞ்சா பதுக்கல் தொடா்பாக 24 பேரை பல்வேறு காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் போலீஸாா் கைதுசெய்து வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல, அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்ாக மாவட்டம் முழுவதும் 7 பேரை கைது செய்தனா்.
மேலும், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்ாக 6 போ், மதுபானம் கடத்தல், விற்பனை தொடா்பாக 98 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவா்களிடமிருந்து 314 மதுப் புட்டிகள், 3.5 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடா்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 போ் கைது செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறை தெரிவித்தது.