தஞ்சாவூர், 4 நாட்களாக குகை அறைகளில் முடங்கி கிடக்கிறோம். உணவு, தூக்கமின்றி தவித்து வரும் எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று மத்திய அரசுக்கு தஞ்சை மாணவிகள் வீடியோ மூலம் கதறி உள்ளனர்.
உக்ரைன் நாட்டிற்குள் ரஷிய படைகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பலர் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் அங்குள்ள சுரங்கப் பாதையில், குகை போன்ற அறைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் படித்து வருகிறார்கள். அங்கு போர் நிகழ்ந்து வரும் நிலையில் அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த ஆஷா, தஞ்சையை சேர்ந்த மார்ஷெலின், பிரபாவதி உள்ளிட்ட 9 மாணவிகள் நேற்று மத்திய அரசுக்கும், தங்களது பெற்றோருக்கும் ஒரு வீடியோ அனுப்பி உள்ளனர்.
நாங்கள் உக்ரைனில் உள்ள ஜபோரிஷியாவில் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறோம். தற்போது இங்கு போர் நடைபெறுவதால், குகை அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கடந்த நான்கு நாட்களாக குகையில்தான் இருந்து வருகிறோம்.
இங்கு நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. காற்று இல்லாததால் மூச்சு கூட விட முடியவில்லை. இதனால் மூச்சுத்திணறல் வரும் வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு மிகுந்த பயமாக உள்ளது.
இங்குள்ள குகையில் தங்க வேண்டிய அளவை தாண்டி நிறைய பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் தங்கியுள்ள குகையில் உணவு, தண்ணீர் இல்லை. கடந்த 4 நாட்களாக உணவு, தூக்கமின்றி தவித்து வருகிறோம்.
பெண்களாகிய எங்களுக்கு இயற்கை உபாதையை கழிப்பது கூட சிரமமாக இருக்கிறது. எங்களை வழிநடத்தி வெளியே கொண்டு வர யாரும் இல்லை. குண்டுகளின் சத்தம் கேட்கும் போதெல்லாம் இதய துடிப்பே நின்று விடும் போல இருக்கிறது.
ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கும்போதெல்லாம், நாம் உயிருடன் இருப்போமா என ஒருவித பயத்துடனேயே உள்ளோம். பலமுறை விமானத்துக்கு முன்பதிவு செய்து, அது ரத்தாகி விட்டதால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம். இங்கிருந்து இந்தியர்கள் பலரும் தங்களது ஊருக்கு செல்வதாக செய்திகள் வருகிறது.
ஆனால் எங்களுக்கு எந்த தகவலும் வெளியுறவு துறையில் இருந்து வரவில்லை. எங்களை மீட்கக்கோரி அரசுக்கு பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டுள்ளோம். 20-க்கும் மேற்பட்ட ஈமெயில் அனுப்பி உள்ளோம்.
ஜபோரிஷியாவில் இருந்து 24 மணி நேரம் பயணம் செய்தால் தான் உக்ரைன் எல்லையை அடைய முடியும். ஜபோரிஷியாவில் இருந்து மால்டோவா 500 கி.மீ. தூரத்தில் உள்ளது. எனவே, அந்த பகுதிக்கு செல்ல இந்திய அரசு அந்த நாட்டில் அனுமதி பெற வேண்டும். இது தான் ஒரே தீர்வு. எங்களை எப்படியாவது காப்பாற்ற மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
தங்களது குழந்தைகள் இவ்வாறு கூறி கதறி அழுததை கேட்ட பெற்றோர்களும் கதறி அழுதனர். நீங்கள் அனைவரும் பத்திரமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். மத்திய, மாநில அரசுகள் நிச்சயம் நடவடிக்கை எடுத்து உங்களை தாய்நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்வார்கள் என்று கூறினர்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தங்கள் குழந்தைகளை மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகளின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.