0 0
Read Time:4 Minute, 15 Second

மயிலாடுதுறை அருகே, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமரா மூலம் அவர் சிக்கினார்.

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் பாவா நகர் ரெயில்வே கேட் பகுதியில் கடந்த 25-ந் தேதி பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது இறந்து கிடந்தது 17 வயது சிறுமி என்பது தெரிய வந்தது. அவர், வாலிபர் ஒருவருடன் மொபட்டில் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளின் அடிப்படையில் நீடூர் பி.எம். நகரை சேர்ந்த நாகராஜன் மகன் அய்யப்பன் (வயது 27) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அய்யப்பனும், அந்த சிறுமியும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுமி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதால் அய்யப்பன் அந்த சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

அய்யப்பனுக்கு ஏற்கனவே திருமணமாகி, 3½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு அவருடைய மனைவி இறந்து விட்ட நிலையில் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் அய்யப்பன் தனது குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த ஓராண்டாக சிறுமியுடன் அவர் நெருங்கி பழகி வந்துள்ளார்.

9-ம் வகுப்பு வரை படித்துள்ள அந்த சிறுமி கடந்த சில மாதங்களாக திருப்பூரில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த சிறுமியிடம், அய்யப்பன் திருமணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார்.

கடந்த 25-ந் தேதி இருவரும் நீடூரில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது அந்த சிறுமி மகனை விடுதியில் சேர்த்து விட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அய்யப்பனை வற்புறுத்தியதுடன், ரெயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், சிறுமியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் போலீசார் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்தனர். மேலும் அய்யப்பன் மீது ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் சிறுமியை வாலிபர் கழுத்தை நெரித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %