உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் சிலர் மீட்கப்பட்டும் வருகிறார்கள். இருப்பினும் சிலருக்கு எந்த உதவியும் கிடைக்காமல் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவ-மாணவிகளும் தவித்து வருகின்றனர்.
பரங்கிப்பேட்டையை சேர்ந்த அபுசுகைல், மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பிரியதர்ஷினி கண்ணன், கடலூர் புதுக்குப்பம் மெயின்ரோடு காவியபிரியா, தொழுதூரை சேர்ந்த தரனேஷ், பண்ருட்டி கீழ்மாம்பட்டு கோபிகாஸ்ரீ, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலுநகரை சேர்ந்த சவிதா பிரேம்குமார், அரிசிபெரியாங்குப்பம் உதயகுமார், பண்ருட்டி வ.உ.சி.தெரு ஹரிராமச்சந்திரன் ஆகிய 8 பேர் அங்குள்ள மருத்துவக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் 8 பேரில் பிரியதர்ஷினி, காவியபிரியா, சவிதா ஆகிய 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர் கள் தற்போது இந்திய தூதரகம் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். இதில் அபுசுகைல் உள்பட 5 பேரும் கார்கிவ் பகுதியில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.
அவர்கள் கார்கிவ் ரெயில் நிலையத்திற்கு வந்த போது, ரஷிய படைகள் குண்டுகள் வீசி உள்ளது. இதனால் பதறி போன அவர்கள் மீண்டும் தாங்கள் இருந்த இடத்திற்கே சென்று விட்டனர். சிலர் இரவு செல்லும் ரெயிலில் ஏறுவதற்காக காத்திருப்பதாக தங்களது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர்.
இது பற்றி அபுசுகைல் தாய் செய்யது நசீரா கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி தான் முதலாமாண்டு மருத்துவம் படிக்க எனது மகன் உக்ரைன் சென்றான். தற்போது அவன் வசிக்கும் இடத்திற்கு அருகே ரஷியா குண்டு வீசி வருவதாக தெரிவித்தான். அதில் இருந்து தப்பிக்க அவனது சீனியர் மாணவர்களுடன் கார்கிவ் ரெயில் நிலையத்தில் காத்திருப்பதாக தெரிவித்தான். அவனை இந்திய அரசும், மாநில அரசும் மீட்டு வர வேண்டும் என்றார்.
உதயகுமார் தந்தை இளம்வழுதி கூறுகையில், தனது மகனின் பாஸ்போர்ட்டை கல்லூரி நிர்வாகம் கொடுக்க மறுக்கிறது. அதனால் உதயகுமார் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உக்ரைனிலேயே தவிக்கிறான்.
எனவே தனது மகன் உதயகுமாரை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதேபோல், கோபிஸ்ரீ தந்தை திருமலை, தாரனேஷ் தாய் மேனகா ஆகியோரும் தங்களது மகள், மகன்கள் எவ்வித உதவியும் இன்றி உக்ரைனில் தவித்து வருவதாகவும், அவர்களை பத்திரமாக மீட்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.