0 0
Read Time:3 Minute, 59 Second

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர்.

தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் அங்கு சிக்கியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக 24 பேர் தமிழகம் வந்தடைந்தனர். இந்த நிலையில், 3-வது நாளாக நேற்று முன்தினம் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சோ்ந்த 21 மருத்துவ மாணவர்கள் டெல்லியில் இருந்து நேற்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தனர். அதில், சென்னை 10, கோவை 4, திருப்பூா் 2, திருநெல்வேலி 1, தூத்துக்குடி 1, கன்னியாகுமரி 1, கடலூா் 1, திருப்பத்தூா் 1 ஆகிய 21 பேரும் அடங்குவர்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் மாணவர்களை தமிழக அரசின் சார்பில் அயலக நலம் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

பின்னர் மாணவர்கள் அவரவா் சொந்த ஊர்களுக்கு தமிழக அரசின் சொந்த செலவில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது,

‘தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசிற்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தமிழக மாணவர்கள் தொடர்ந்து உக்ரைன் நாட்டில் இருந்து மீட்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இதுவரை சுமார் 88 பேர் தமிழக மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்’என்று கூறினார்.

விமான நிலையத்தில் உக்ரைனில் இருந்து வந்த மாணவ-மாணவிகள் கூறுகையில்,‘போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து ஹங்கேரி நாட்டு எல்லைக்கு சென்றோம். பின்னர் அங்கிருந்து இந்திய தூதரகம் எங்களை பத்திரமாக டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

டெல்லியில் இருந்து எங்களை மீட்டு தமிழக அரசு அதிகாரிகள் சென்னை அழைத்து வந்தனர். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் இங்கே பாதுகாப்பாய் வந்து விட்டோம்.

ஆனால் இன்னும் நிறைய மாணவர்கள் உக்ரைன் தலைநகரங்களில் ஆபத்தான நிலையில் உள்ளார்கள். எனவே விரைவில் அவர்களை மீட்டு கொண்டுவர வேண்டும். போர் நடக்கும் போது எங்களுக்கு வீடியோ கால் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உறுதுணையாக இருந்தது உதவியாக இருந்தது’ என கூறினர்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் மேலும் 37 பேர் வந்து இறங்கினர். நேற்று ஒரே நாளில் மட்டும் உக்ரைனில் இருந்து 58 பேர் சென்னை விமான நிலையம் வந்து சொந்த ஊர் திரும்பி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %