கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடந்தது. இதில் கடலூர் மாநகராட்சிக்கு 45 வார்டுகளுக்கும், 6 நகராட்சிகளில் நெல்லிக்குப்பம் 30 வார்டுகள், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் தலா 33 வார்டுகள், வடலூர் 27 வார்டுகள், திட்டக்குடி 24 வார்டுகள் என 180 வார்டுகளுக்கும் தேர்தல் நடந்தது.
பேரூராட்சிகளில் அண்ணாமலைநகர், கெங்கைகொண்டான், பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை,
மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை தலா 15 வார்டுகளுக்கும் காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி தலா 18 வார்டுகள் என மொத்தம் 222 வார்டுகள் என மாவட்டம் முழுவதும் 447 வார்டுகளுக்கு தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. இதில் 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
வாக்குகள் கடந்த 24-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
இதையடுத்து வெற்றி பெற்ற 447 வார்டு கவுன்சிலர்களும் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணி அளவில் பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்கள். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் தனித்தனியாக பதவி பிரமாண உறுதி மொழி ஏற்று பதவி ஏற்கிறார்கள்.
அதன்பிறகு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடக்கிறது. போட்டி இருந்தால் தேர்தலும், போட்டி இல்லை என்றால் ஒருமனமாகவும் தேர்வு செய்யப்படுவார்கள்.
இன்று (புதன்கிழமை) பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்தது. இது தவிர நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களும் புதுப்பொலிவு பெற்று வருகிறது.