தஞ்சாவூர்: உரிமம் இன்றி செயல்பட்டதாக கூறி 148 ஆண்டுகள் பழமைவாய்ந்த தஞ்சை யூனியன் கிளப்புக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே 148 ஆண்டுகள் பழமை வாய்ந்த யூனியன் கிளப் உள்ளது. இதன் அருகே காவிரி லாட்ஜ், ஜூபிடர் தியேட்டர் ஆகியவை செயல்பட்டு வந்தது. இவற்றில் காவேரி லாட்ஜ், ஜூபிடர் தியேட்டருக்கான 99 ஆண்டுகள் குத்தகை காலம் கடந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இதேபோல் 148 ஆண்டுகளை கடந்த 29 ஆயிரத்து 743 சதுரஅடி பரப்பளவு கொண்ட யூனியன் கிளப்புக்கு ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை.
எனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு பொது வளாகங்கள்(ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுதல்) சட்டம் 1975-ன் கீழ் யூனியன் கிளப், காவேரி லாட்ஜ், ஜூபிடர் தியேட்டர் ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்தினர். ஆனால் இந்த நடவடிக்கையை எதிர்த்து யூனியன் கிளப் சார்பில் மாநகராட்சிக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி தஞ்சை தாசில்தார் மணிகண்டன், யூனியன் கிளப்புக்கு சென்று அங்கு ஒரு நோட்டீசை ஒட்டினார். மேலும் கிளப் செயலாளரிடம் நோட்டீசை வழங்கினார். அந்த நோட்டீசில், தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள யூனியன் கிளப் செயல்படுவதற்கான லைசென்சு மற்றும் பொது கட்டிடத்திற்காக பெறப்பட்ட லைசென்சு ஆகியவற்றை 3 நாட்களுக்குள் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு கடந்த 25-ந் தேதி யூனியன் கிளப் செயலாளர், தாசில்தாரிடம் கடிதம் ஒன்றை அளித்தார். அந்த கடிதத்தில், யூனியன் கிளப் செயல்பாடு தமிழ்நாடு பொது கேளிக்கை விடுதி சட்டம் 1888-ன் கீழ் வரக்கூடியது அல்ல என்றும், அதனால் தாங்கள் கோரியுள்ளபடி அனுமதி ஆணை பெற வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தமிழ்நாடு பொது கட்டிட உரிம சட்டம்-1965 தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இது தொடர்பாக ஆவணங்களை தாசில்தார் பரிசீலனை செய்தபோது, தமிழ்நாடு பொது கட்டிட உரிமம் 1965-ன் படி உரிய உரிமம் பெறப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்பார்வையில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் தஞ்சை யூனியன் கிளப் கட்டிடத்தின் கதவை பூட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ‘சீல்’ வைத்தனர். மேலும் தண்டோரா மூலம் மக்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
யூனியன் கிளப் செயலாளருக்கு நோட்டீசு அளிக்கப்பட்டது. அதில் தாங்கள் கிளப்பாக பயன்படுத்தி வரும் கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பது தெரிய வருகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொதுநலன் கருதி தமிழ்நாடு பொது கேளிக்கை விடுதி சட்டம்-1888, பிரிவு 11-ன் படி இனி மேற்கொண்டு மேற்படி கட்டிடம் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்பதை இதன்மூலம் ஆணையிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டிடம் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.