வல்லம், தஞ்சை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானார்கள்.
தஞ்சை ஜெபமாலைபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய்(வயது 26). தஞ்சை பிருந்தாவனம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்(22). இவர்களில் விஜய் டிரைவராகவும், ஜெயராமன் எலக்ட்ரீசியனாகவும் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இருவரும் நேற்று தஞ்சையில் இருந்து மதுரைக்கு காரில் தஞ்சை-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தனர். காரை விஜய் ஓட்டி சென்றார்.
அப்போது வல்லம் புதூர் பிரிவு சாலை அருகே சாலையில் ஜல்லி ஏற்றி வந்த லாரி ஒன்று ஒரமாக நின்று கொண்டிருந்தது. லாரி டிரைவர் தண்ணீர் பிடிப்பதற்காக லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக சென்ற கார் ரோட்டோரமாக நின்ற லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி லாரியின் உள்ளே சிக்கி கொண்டதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் காரில் இருந்த விஜய், ஜெயராமன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் காருக்கு உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த சாலையில் வந்த மற்ற வாகன ஓட்டிகள் வல்லம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் காரில் சிக்கி இருந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக தஞ்சை-திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து விஜய்யின் தந்தை கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான வல்லத்தை சேர்ந்த முருகேசன்(50) என்பவரை கைது செய்தனர்.