0 0
Read Time:5 Minute, 28 Second

தஞ்சாவூர்: உக்ரைனில் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வரும் தஞ்சை மருத்துவ மாணவிகளை பத்திரமாக மீட்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதை தொடர்ந்து அந்த நாட்டு மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்கள் பாதுகாப்பாற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவ-மாணவிகளை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரும் பணி நடந்து வருகிறது. இருந்தாலும் பலரால் அங்கிருந்து வெளியே வர முடியாமல் பரிதவித்துக்கொண்டு இருக்கின்றனர்.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவ, மாணவிகள் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள், தங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என வீடியோ மூலம் பேசி அதை மத்திய அரசுக்கும், தங்களது பெற்றோருக்கும் அனுப்பி வைத்தனர்.

உக்ரைனில் ஜபோரிஷியாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி மார்ஷெலின், தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி வசந்தபுரி நகரில் வசித்து வரும் தனது தாய் ஜாக்குலினுடன் நேற்று முன்தினம் மாலையில் செல்போனில் பேசினார்.

அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்தும் ஜாக்குலினால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர் மிகவும் சோர்வு அடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்றுமாலை 4.30 மணி அளவில் மார்ஷெலின் தனது தாய் ஜாக்குலினை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

தனது மகளின் குரலை கேட்டதுடன் அந்த தாய் ஆனந்த கண்ணீருடன் அவருடன் பேசினார். சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

உக்ரைன் நாட்டில் சப்ரோசியா என்ற இடத்தில் சிக்கி தவிப்பதாகவும், உணவு இன்றி உடல்நிலை பாதித்து உள்ளதாகவும், செல்போனில் தொடர்பு கொண்டு எனது மகள் தெரிவித்தார். நேற்று மாலை(அதாவது நேற்று முன்தினம்) சக மாணவிகளுடன் ரெயிலில் ஏறிவிட்டதாக கூறினார்.

ஆனால் எந்த பகுதிக்கு செல்கிறார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. சக மாணவியின் பெற்றோர் தான், போலந்து நாட்டிற்கு ரெயிலில் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வருவார்கள் என என்னிடம் தெரிவித்தனர்.

எனது மகளை தொடர்பு கொண்டு பேச பல முறை முயற்சி செய்தும், முடியவில்லை. ‘ரிங்’ செல்கிறது. ஆனால் எடுத்து பேசவில்லை. திடீரென மாலை நேரத்தில் என் மகள் செல்போனில் பேசினார். டவர் கிடைக்கவில்லை. சார்ஜ் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால் தான் பேச முடியவில்லை. என்னைப்பற்றி கவலைப்படாமல் இருங்கள்.

இங்கு உணவு கிடைக்கவில்லை. ஒரு பிஸ்கட் கிடைத்தால் கூட சக தோழிகளுடன் பகிர்ந்து தான் சாப்பிடுகிறோம். தண்ணீர் கூட கிடைக்கவில்லை என கூறிக்கொண்டு இருந்தபோதே செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

என் மகளை போன்று ஏராளமான மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். இவர்களை எல்லாம் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் கூடுதல் முயற்சி செய்து இந்திய மாணவர்கள் அனைவரையும் அங்கிருந்து பத்திரமாக மீட்டு அழைத்து வர வேண்டும். இங்கே அழைத்து வந்தாலும் அவர்களது படிப்பு பாதிக்காமல் தொடர்ந்து படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் சக மாணவிகளின் பெற்றோரும், தங்களது பிள்ளைகளை பத்திரமாக மீட்டு அழைத்து வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %