தஞ்சையில் காந்திஜி வணிக வளாகத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.
தஞ்சை காந்திஜி சாலையில் மாநகராட்சி அலுவலகத்துக்கு அருகே காந்திஜி வணிக வளாகம் உள்ளது. இந்த கட்டிடம் 1994-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு சைக்கிள் கடை, கட்சி அலுவலகம், டாஸ்மாக் கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை உள்ளிட்ட 36 கடைகள் இயங்கி வந்தன.
இந்த வணிக வளாகத்திற்கு அருகே ஒரு புறம் மாநகராட்சி ஆணையர் குடியிருப்பும், இன்னொரு பகுதியில் மாநகராட்சி செயற்பொறியாளர் குடியிருப்பும் உள்ளன. இந்த இடத்தை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3 வணிக வளாகம் கட்டப்படுகிறது.
டெக்ஸ்டைல்ஸ், நகைக்கடை, ஹார்டுவேர் ஆகிய வணிக வளாகங்கள் ரூ.14 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப்படுகிறது. இதையடுத்து இதில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியது. அதன்படி கடைகளை வைத்திருந்தவர்கள் காலி செய்தனர்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காந்திஜி வணிக வளாகத்தில் உள்ள கடைகளை பொக்லின் எந்திரம் மூலம் இடித்தனர். மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் முன்னிலையில் கடைகள் இடிக்கும் பணிகள் தொடங்கின. இன்றும் இடிக்கும் பணிகள் நடைபெறுகிறது.
காந்திஜி வணிக வளாகம் இடிக்கப்பட்டதும் அருகில் உள்ள மாநகராட்சி ஆணையர் மற்றும் செயற்பொறியாளர் குடியிருப்புகளும் இடிக்கப்பட்டு வணிக வளாகங்கள் கட்டும்ப ணிகள் தொடங்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.