விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க.வினரை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 11 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, அ.தி.மு.க. 3, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
இதுவரை ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த நகரமன்ற தலைவர் பதவி, தற்போது பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தி.மு.க. கவுன்சிலர்கள் நகரமன்ற தலைவர் மற்றும் துணைதலைவர் பதவியை கைப்பற்றும் முனைப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நகரமன்ற தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கி, தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத தி.மு.க. கவுன்சிலர்கள், மேலும் சில கவுன்சிலர்களுடன் கடந்த 2-ந்தேதி மாலை மாயமானார்கள். இதனிடையே 15-வது வார்டை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கிரிஜா திருமாறன் என்பவரை நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.
பரபரப்பான சூழ்நிலையில் நேற்று நகராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. தலைவா் பதவிக்கு கிரிஜா திருமாறன் மனுதாக்கல் செய்தார். அந்த சமயத்தில் அங்கு 3 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்தனர். காலை 9 மணியளவில் 20-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் ஒரு வேனில் நகராட்சி அலுவலகம் நோக்கி வந்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென, கவுன்சிலர்கள் வந்த வேனை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், கூட்டணி கட்சிக்கு துரோகம் செய்யாதீர்கள், கூட்டணி தர்மத்தை கடைபிடியுங்கள் என்று கோஷமிட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையிலான போலீசார், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. சிலர் வேனுக்கு அடிப்பகுதியில் சென்று படுத்துக்கொண்டனர். இதனால் வேன் அங்கிருந்து நகர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை, பெண் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
இதனிடையே சாலையோரத்தில் வைத்திருந்த பேரிகார்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தூக்கி, நடுரோட்டில் குறுக்கே போட்டு கயிறு கட்டி வழிமறித்தனர். நிலைமை மோசமானதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தனிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர், கவுன்சிலர்களை மட்டும் வேனில் இருந்து இறங்கி, நகராட்சி அலுவலகத்துக்கு நடந்து வர சொல்லுங்கள் என்றார்.
இதையடுத்து வேனில் இருந்த தி.மு.க. நகர செயலாளர் மணிவண்ணன், தி.மு.க. கவுன்சிலர் ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன் மற்றும் சில நிர்வாகிகள் வேனில் இருந்து கீழே இறங்கினர். அப்போது அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் அவர்களை தாக்கினர். இதனால் அங்கு போர்க்களம் போன்று காட்சி அளித்தது.
நிலைமை மோசமானதை தொடர்ந்து நகர செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். பின்னர், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
பின்னர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் வேனில் இருந்து கவுன்சிலர்கள் இறங்கி, போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகத்துக்குள் நடந்து சென்றனர். 29-வது வார்டை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி, தேர்தல் நடைபெறுவதாக அறிவித்தார். அப்போது அங்கு மொத்தம் 29 கவுன்சிலர்கள் இருந்தனர். அ.தி.மு.க.வை சேர்ந்த 11-வது வார்டு கவுன்சிலர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
29 கவுன்சிலர்களும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். உடனடியாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் கவுன்சிலர் ஜெயந்தி் ராதாகிருஷ்ணன் 23 ஓட்டுகள் பெற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கிரிஜா திருமாறன் 3 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 3 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் நகரசபை தலைவராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி அறிவித்தார்.
இதற்கிடையில் காலை 9 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் மாலை 5 மணியை கடந்தும் நடைபெற்று வருகிறது. மதியத்திற்கு பிறகு தங்களுக்கு துணைத்தலைவர் பதவியை ஒதுக்க வேண்டும் என்று வி.சி.க.வினர் கோரிக்கை விடுத்தனர். இது பற்றி அறிந்ததும் அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் வந்து தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதற்கு கவன்சிலர்கள் தரப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதை தொடர்ந்து, துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மதியம் 2.30 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. நகர செயலாளர் மணிவண்ணனின் மனைவியும், 3-வது வார்டு கவுன்சிலருமான ஜெயபிரபா என்பவர் போட்டியிட மனு தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சாார்பில் ஏற்கனவே தலைவர் பதவியில் தோல்வி கண்ட கிரிஜா திருமறான் போட்டியிட்டார்.
இதில் 29 கவுன்சிலர்களும் பங்கேற்றனர். இதில், 22 ஓட்டுகளை ஜெயபிரபா மணிவண்ணன் பெற்றார். கிரிஜா திருமாறனுக்கு 6 ஓட்டுகள் கிடைத்தது. ஒரு ஓட்டு செல்லாதவை ஆகும்.
ஜெயபிரபா நகரமன்ற துணைதலைவராக வெற்றி பெற்றார் என்று தேர்தல் அதிகாரி பார்த்த சாரதி அறிவித்தார். இதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டதை அடுத்து, அவர் துணைதலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.