சீர்காழியில் தடை செய்யப்பட்ட 20 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சட்டநாதபுரம் ரவுண்டானாவில் நேற்று முன்தினம் இரவு சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட இரண்டு சாக்கு மூட்டைகளில் புகையிலை (ஹான்ஸ்) பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து புகையிலை பாக்கெட்டை கடத்தி வந்த மயிலாடுதுறை வியாபாரி செட்டிதெருவை சேர்ந்த சின்னத்தம்பி மகன் சிவக்குமார் (வயது 46) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 20 கிலோ பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.41 ஆயிரமாகும்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.