உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து அந்நாட்டு அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
உக்ரைன் மீதான போரில் ராணுவ இலக்குகள், அரசின் சொத்துகளை தாக்கி அழிப்பதே இலக்கு என முதலில் தெரிவித்த ரஷ்யா, தற்போது உக்ரைன் நாட்டின் நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டினர் உக்ரைனை விட்டு பாதுகாப்பாக வெளியேறும் பொருட்டு அங்கு 4 முக்கிய நகரங்களில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாற்றியுள்ளார்.
சுமார்35 நிமிடங்கள் வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனின் தற்போதைய சூழல் குறித்தும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மேலும் உக்ரேனில் இருந்து இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவியதற்காக உக்ரைன் அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, சுமி மகாணத்தில் இருந்தும் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உரிய ஒத்துழைப்பை கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, உக்ரைன் ரஷ்யா இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.