மகளிர் முன்னேற்றத்திற்கு ‘திராவிட மாடல் அரசு’ என்றும் துணை நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பெண் ஏன் அடிமையானாள்?” என்று கேள்வி எழுப்பி, அறிவொளிப் பாய்ச்சிய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கருணாநிதி ஆகியோரது வழி நடைபோடும் நமது ‘திராவிட மாடல்’ அரசு, மகளிர்க்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
ரத்த பேதம், பால் பேதம் கூடாது என்ற முழக்கத்தோடு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கான சமூக விடுதலைக்காகப் போராடும் இயக்கம்தான் திராவிட இயக்கம் எனத் தெரிவித்துள்ளார். மகளிர்க்காக தி.மு.க. அரசு செயல்படுத்திய திட்டங்கள், இன்று நாட்டுக்கே வழிகாட்டியாகஅமைந்துள்ளன எனக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களது நலனும் உரிமையும் காக்கப்படும் என்றும் மகளிர் முன்னேற்றத்திற்கு நமது ‘திராவிட மாடல் அரசு’ என்றும் துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை ,அரசு வேலைவாய்ப்புகளில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இப்போது 40 விழுக்காடாக உயர்வு, தொடக்கப்பள்ளிகளில் முழுதும் பெண் ஆசிரியர்கள் நியமனம் , உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு , பேறுகால விடுப்பு ஓராண்டாக உயர்வு , மகளிர் சுய உதவிக்குழு என பெண்களுக்கான பல திட்டங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.