மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகை விழா நடைபெற்றது.
சங்கத் தலைவர் குரு கோவிந்த் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்தாஸ், ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் வெங்கடபாஸ்கர், பொருளாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் நிகழ்வாக, கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் பொட்டவெளி கிராம நிர்வாக அலுவலகம் முகப்பில் அமைக்கப்பட்ட நிழற்குடையை ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி திறந்து வைத்தார்.
தொடர்ந்து யூனியன் கிளப் அரங்கில் நடைபெற்ற விழாவில் மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கல்வி, கலை, அரசியல், சமூக நலன் போன்ற பல்வேறு துறைகளில் சேவையாற்றி வரும் சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி சமூக பணித் துறைத்தலைவர் சோபியாவுக்கு சேவைச் செம்மல் விருதும், பட்டிமன்ற நடுவரும், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளருமான சாந்தி சரஸ்வதிக்கு தன்னம்பிக்கை சுடரொளி விருதும், பரதநாட்டிய ஆசிரியை மகாலெட்சுமிக்கு நிருத்ய குருமணி விருதும், வள்ளாலகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட்ஜெயகரனுக்கு சேவைச் செம்மல் விருதும், வாகன ஓட்டுநரும், பயிற்சியாளருமான வினோதினிக்கு நம்பிக்கை சுடர் விருதும் வழங்கி மாவட்ட ஆளுநர் பாலாஜி பாராட்டி வாழ்த்தினார்.
மேலும், இந்தியாவில் முதன்முறையாக சூரிய ஒளி மூலம் நூதன முறையில் ஓவியம் வரையும் விக்னேஷ்க்கு கலைச் செம்மல் விருதும், நளபாகத்துறையில் சிறந்து விளங்கும் செந்தில்குமாருக்கு நளபாக சக்கரவர்த்தி விருதும், மகாகவி சிலம்பம் பயிற்சியக நிர்வாகி சுந்தர்ராமனுக்கு சிலம்ப அரசன் என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தொடர்ந்து ரோட்டரி சேவைக்கான நிதியை கிங்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஆளுநரிடம் வழங்கினர். இதில் கிங்ஸ் ரோட்டரி சங்க சாசன தலைவர் சஜ்ஜல், முன்னாள் ரோட்டரி உதவி ஆளுநர் ரவிக்குமார், பல்வேறு ரோட்டரி சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் கிங்ஸ் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிங்ஸ் ரோட்டரி சங்க ஆசிரியர் குலசேகரன், அகஸ்டின் விஜய் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.