மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் பழையாறில் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறில் உள்ள மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன்பிடிப்பது வழக்கம். இங்கிருந்து 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கடல் சீற்றமாக இருப்பதாலும், கடல்காற்று பலமாக வீசிவருவதாலும் கடந்த 2 நாட்களாக இந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. துறைமுக வளாகத்தில் மீன் உலரவைத்தல், மீன்களை வகை பிரித்தல், மீன்களைப் பாதுகாத்தல், விற்பனைக்காக வெளியூர்களுக்கு அனுப்பிவைத்தல், மீன் வலை பிண்ணுதல், ஐஸ்கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் 2 ஆயிரம் தொழிலாளர்களும் நேற்று 2-வது நாளாக வேலைக்கு செல்லவில்லை.
கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லாததால் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக பழையாறு மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் அங்கு இடையிடையே மழை பெய்து வருவதால் கருவாடு உலர வைக்கும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.