0 0
Read Time:3 Minute, 10 Second

சீர்காழி அருகே, கலெக்டரின் உத்தரவை மீறி திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகிறது. அங்கு நெல் மணிகள் வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே டி.மணல்மேடு கிராமத்தில் அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்படும் நெல் இங்கு சேமித்து வைக்கப்படுகிறது. 3,500 டன் நெல் மூட்டைகள் வரை இந்த திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்படுவது வழக்கம்.

இந்த நெல் சேமிப்பு கிடங்கு தாழ்வான பகுதியில் உள்ளது. கடந்த ஆண்டு (2021) நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பெய்த கன மழையால் சேமிப்பு கிடங்கை சுற்றி தண்ணீர் தேங்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதம் அடைந்து, நெல் மணிகள் முளைக்க தொடங்கின.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது தாழ்வான பகுதியில் இயங்கிவந்த சேமிப்புக்கிடங்கை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதாக உத்தரவாதம் அளித்து இருந்தனர்.

3 மாதங்களான பின்னரும் தற்போது வரை அங்கிருந்து நெல் மூட்டைகளை வேறு இடத்துக்கு மாற்றவில்லை. மேலும் கலெக்டரின் உத்தரவை மீறி புதிதாக நெல் மூட்டைகளை அதே இடத்தில் சேமிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இருந்து விடிய, விடிய பெய்த கன மழையால் சேமிப்பு கிடங்கை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் அங்கு சரியான முறையில் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படுவது இல்லை.

அங்கு உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல் மணிகள் வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். உடனடியாக இந்த திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %