0 0
Read Time:7 Minute, 23 Second

தமிழகத்திலேயே ஊரகப்பகுதியில் முதன்முறையாக ஸ்மார்ட் வகுப்பறையுடன் கூடிய அங்கன்வாடி மையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

தஞ்சையை அடுத்த குருங்குளம் மேற்கு ஊராட்சியில் உள்ள தோழகிரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையம் ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் ஆன கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு பணியை மேற்கொண்டபோது, அங்கன்வாடி மையத்திற்கும் சென்றார். அப்போது அங்கு சமையல் அறை கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்தது.

இதை பார்த்த கலெக்டர், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்தார். அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் ‘ஸ்மார்ட் வகுப்பறையுடன் கூடிய அங்கன்வாடி மையம்’ கட்டப்பட்டது. சமையல் அறை, கழிவறை வசதியும் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு தோழகிரிப்பட்டி, சிலோன்காலனி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 45 குழந்தைகள் தினமும் வந்து செல்கின்றனர்.

புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் தனியார் நர்சரி பள்ளிகளுக்கு இணையாக உள்ளது. தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கான செயல்வழி கற்றல் திறனை அதிகரிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருக்கைகள், குழந்தைகளுக்கான சைக்கிள், பந்துகள், குழந்தைகள் சுற்றி அமருவதற்கு வசதியான மேஜைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பொம்மைகள், பழங்கள், காய்கறிகள், விலங்குகளின் உருவப்படங்கள் சுவர்களில் வரையப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய பொருட்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி புரொஜக்டர் அமைக்கப்பட்டு அதில் கதைகள், பாட்டுகள் போன்றவை ஒளிபரப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விலங்குகள், பறவைகளின் உருவங்களை சரியாக பொருத்தும் வகையில் குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் பொருட்களும் இடம் பெற்றுள்ளன. கட்டிடத்திற்கு வெளியே கார்ட்டூன் பொம்மைகளின் வரைபடம் வரையப்பட்டதுடன், குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கக்கூடிய வரைபடமும் வரையப்பட்டுள்ளது.

தோழகிரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 116 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் தனி கட்டிடத்தில் ஆயிரம் புத்தகங்கள் கொண்ட “அகர நூலகம்” என்ற புதிய நூலகம் ரூ.3 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அகர நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையுடன் கூடிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்பறையுடன் கூடிய அங்கன்வாடி மையம் மற்றும் அகர நூலகத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர், மாநகராட்சி பகுதியில் தான் இதுபோன்ற ஸ்மார்ட் அங்கன்வாடி மையம் இருக்கும்.

தமிழகத்திலேயே முதன்முறையாக ஊரகப்பகுதியில் ஸ்மார்ட் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் இருப்பதை போன்று இப்போது அரசு பள்ளிகளிலும் கொண்டு வந்துள்ளோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்டிப்பாக பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். ஒரு குழந்தை கூட படிக்காமல் இருக்கக்கூடாது. இடையில் நின்ற குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டும். கல்வி கற்று கொடுத்தால் அது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினார்.
முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் நன்றி கூறினார்.

ஸ்மார்ட் வகுப்பறையில் குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடினர். குழந்தைகள் விளையாடுவதை பார்த்து பெற்றோரும், அமைச்சர், எம்.எல்.ஏ.க்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அகர நூலகத்தில் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாசிக்க கற்று கொடுத்தார்.
ஸ்மார்ட் வகுப்பறையுடன் கூடிய அங்கன்வாடி மையம் குறித்து அங்கன்வாடி பணியாளர் நதியா கூறும்போது, 2 வயது குழந்தை முதல் 6 வயது குழந்தை வரை சுமார் 45 பேர் தினமும் வருகின்றனர். 30 பேர் தான் அனுமதிக்கப்பட்டாலும் கூடுதலான குழந்தைகள் வருகின்றனர். இவர்களுக்கு எழுத்துப்பயிற்சி, கதை, பாடல்களை சொல்லி கொடுப்போம்.

இதற்கு முன்பு புத்தகத்தின் மூலமாக சொல்லி கொடுத்ததை இனிமேல் ஒலி-ஒளியுடன் கூடிய திரையின் மூலம் சொல்லி கொடுக்க உள்ளோம். தற்போது ஏராளமான வசதிகள் செய்து கொடுத்து இருப்பதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக வந்து செல்வார்கள் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %