பேராவூரணியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 31 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
பேராவூரணியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி. செழியன், அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 31 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். அதனை தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக சாலைவசதியின்றி இருந்த நரிக்குறவர் காலனி பகுதிக்கு அமைக்கப்பட்ட தார்சாலையை திறந்து வைத்து பேசினார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதயத்தில் இடம் பிடித்துள்ளவர்கள் நரிக்குறவர் இனமக்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் வார்த்தையில் இவர்கள் நெறிக்குறவர்கள். பொதுவாக தேர்தல் காலத்தில் வாக்கு சேகரிக்க வரும்போது பல வாக்குறுதிகளை சொல்லிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் மறந்துவிடுவார்கள்.
இந்த பகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பாதை பிரச்சினை இன்று முடிவுக்கு வந்துள்ளது. பட்டா வழங்கப்பட்டுள்ளது. அடுத்து அனைவருக்கும் வீடுகட்டித்தரப்படும். பள்ளி செல்லாத குழந்தைகளே இல்லை என்ற நிலை உள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும். இந்த அரசுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
முன்னதாக நரிக்குறவர் பெண்கள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாசிமணி மாலை அணிவித்தனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதி பாலு, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்திசேகர், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, ஆர்.டி.ஓ. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.