மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் அங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் இடநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார்கள். எனவே இங்கு புதிய வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த 217 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வகுப்புக்கு ஒரு அறை என்றாலும் 8-ம் வகுப்பு அறைகள் இருக்கவேண்டிய இந்த பள்ளியில் 7 வகுப்பறைகள் மட்டுமே இருந்தன. அதில் மிகவும் பழுதடைந்த ஒரு வகுப்பறை இடிக்கப்பட்டு விட்ட நிலையில் மேலும் இரண்டு வகுப்பறைகள் சேதமடைந்து மாணவர்கள் அமர முடியாத நிலையில் அதுவும் மூடப்பட்டு விட்டன. மீதமுள்ள நான்கு அறைகளிலேயே ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 217 மாணவ- மாணவிகளும் அமர்ந்து படித்து வருகிறார்கள்.
இதனால் மாணவ-மாணவிகள் இட நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார்கள். போதிய இட வசதி இல்லாததால் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு அமர்ந்து படித்து வருகின்றனர்.
போதிய வகுப்பறை வசதி இல்லாததால் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை உரிய முறையில் கவனித்து கல்வி கற்க முடியாமல் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் மாணவ மாணவிகள் தற்போது அமர்ந்துள்ள கட்டிடமும் சேதமடைந்து மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் சொட்டும் நிலை உள்ளது. தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உள்ள அந்த வகுப்பறையும் மூடப்பட்டால் மாணவ-மாணவிகள் அனைவரும் மரத்தடியில் மட்டுமே அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலை ஏற்படும்.
இதுகுறித்து கடந்த பல ஆண்டுகளாக சோழம்பேட்டை உள்ளாட்சி நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவித பயனும் இல்லை. தொடர்ந்து ஏழை, எளிய மக்கள் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க ஏதுவாக இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தர வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே ஏழை, எளிய மாணவர்கள் கல்வியில் மேம்பட அரசு உடனடியாக சோழம்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.